இளநிலை மருத்துவ சேர்க்கைக்கான நீட் தேர்வில், சிபிஎஸ்இ பாடத்தில் இருந்து அதிக கேள்விகள் கேட்கப்பட்டன. இதனால், மாநில பாடத்திட்டத்தில் தமிழ்வழியில் பயின்ற மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். இதை கருத்தில் கொண்டு, அரசுப் பள்ளியில் தமிழ்வழியில் பயின்ற மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பில், 7.5 சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

திருச்சி மாவட்டம் லால்குடியில் மளிகை கடையில் வேலை செய்து வருபவர் செந்தில்குமார். இவரின் மகன் ஹரிகிருஷ்ணனின் மருத்துவ கனவு நனவாகியுள்ளது. இதனிடையே, களக்குறிச்சி மாவட்டம் தச்சூர் கிராமத்தை சேர்ந்த அன்பரசன், மூன்றாவது முறையாக நீட் தேர்வு எழுதி 440 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இதேபோன்று, அரசு போக்குவரத்து துறையில் பணியாற்றுபவரின் மகள் ஷோபனா மற்றும் ஆட்டோ ஓட்டுநரின் மகன் நரசிம்மன் உள்ளிட்டோரும், அரசுப் பள்ளியில் பயின்று, தங்களது மருத்துவர் இலக்கை எட்டியுள்ளனர்.
நீட் தேர்வு காரணமாக முந்தைய ஆண்டுகளில், அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்த எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திலேயே இருந்தது. ஆனால், நடப்பு ஆண்டு 7.5 விழுக்காடு முன்னுரிமை ஒதுக்கீடு காரணமாக 405 மாணவர்கள், மருத்துவ கல்வி கற்கும் வாய்ப்பு கணிந்துள்ளது.